Friday, 23 July 2010

காதல் உள்ளவரை இந்த காதல் என்றும் தோற்காது .....................(பூக்கள் பூக்கும் தருணம் .........)

களவாணி



உரம், விவசாயம், ஊடால காதல்னு அழகான கதையும் அற்புதமான பிரசன்டேஷனுமாக வந்திருக்கிறார் புது இயக்குனர் சற்குணம்!
இதுவரைக்கும் எங்கெங்கேயோ சறுக்குன தயாரிப்பாளர்கள் இனி இவர் பக்கம் மைய(ல்)ம் கொள்ளலாம்.
துபாய்க்கார அப்பாவுக்கு துடுக்கான பிள்ளை விமல். வெட்டி வேலை, வீம்பு சண்டை, சாயங்கால சரக்கு என்று ஊதாரியாக திரிகிறவருக்கு, பக்கத்து கிராமத்திலிருந்து பள்ளிக்கு வரும் ஓவியா மீது காதல். ஆனால் ஓவியாவின் அண்ணனுக்கும் விமலுக்கும் ஜென்ம பகை. சந்தர்ப சூழ்நிலை விமலை மேலும் கெட்டவனாக்க, வெட்டு குத்தாகிறார்கள் வருங்கால மச்சான்கள். இவ்வளவையும் மீறி இணைந்தார்களா ஜோடி என்பது க்ளைமாக்ஸ். ஏ.வெங்டேஷ், பேரரசுகளுக்கு இப்படி ஒரு கதை கிடைத்தால் தியேட்டர் கேண்டீனில் கூட பிளாஸ்திரியும், டெட்டாலும்தான் விற்று தொலைந்திருக்கும். ஆனால் சற்குணத்தின் ட்ரீட்மென்ட்டே தனியாக இருக்கிறது.
LC 112 என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு இவர் எழுதியிருக்கும் புதுக்கவிதை இன்னும் கொஞ்ச நாளைக்கு தஞ்சாவூர் பக்கம் தண்ணீராக ஓடினாலும் ஆச்சர்யமில்லை. ஊர் முழுக்க இதை எழுதி போட்ருவேன் என்று மிரட்டியே ஓவியாவை 'கட்டிக்கிறேன்'னு சொல்ல வைக்கிற விமல், அப்படியே ஒரு நடை ஓவியாவின் அப்பாவிடமே போய் 'மேற்படி ரக நெல்லு இருக்கா' என்று சதாய்ப்பது செம கரைச்சல். காரின் பின் சீட்டில் இருப்பது அப்பா என்பது தெரியாமலே தனது வீர தீர கதையை சொல்லி மாட்டிக் கொள்வதும், ஓவியா நட்டுவிட்டு போன நாலு கொத்து நாற்றை மட்டும் செம்மையாக 'கவனித்து' அதன் வளர்ச்சியில் தன் காதலை வளர்ப்பதுமாக பின்னி எடுத்திருக்கிறார் விமல்.
இதே இந்த கதைக்காகவே பெத்து போட்ட மாதிரி இருக்கிறார் ஓவியாவும். போதையில் தன் கண்ணெதிரிலேயே அத்தை மகளை கடத்திப் போகும் விமலை பார்த்து பேஸ்த் அடித்துப் போய் நிற்கிற காட்சியில் சூடு பிடிக்குது கதை. இளசுகளின் 'கடலைக்கு' இடையூறாக வரும் சிறுவனுக்கு கண்ணை கட்டி கண்ணாமூச்சு ஆட விடுவதெல்லாம் கலகலப்பான காதல் பொதுமறை!
அவ்வப்போது விமல் கோஷ்டியின் அரவையில் சிக்கி 'நொந்தாமிர்தம்' ஆகிறார் கஞ்சா கருப்பு. இவரது காதுபடவே 'பஞ்சாயத்து காலமாகிவிட்டார்' என்று மைக்கில் அறிவிப்பதை கேட்டு திடுக்கிடுகிற போதெல்லாம் கைதட்டல்களால் திடுதிடுக்கிறது தியேட்டரும். அகன்ற கண்களில் ஆச்சர்யம் கோபம் பரிதாபம் என்று ஏகப்பட்ட படங்களை ஓட்டுகிறார் சரண்யா. 'என் புள்ளைக்கு கிரகம் சரியில்ல. ஆவணி வந்தா டாப்புல போய்டுவான்' என்று நம்பிக்கை காட்டுகிறாரே, அற்புதம்! பிள்ளைக்காக துபாயிலிருந்து வாங்கி வந்த லேப் டாப்பை வேஸ்ட்டா போச்சே என்று கோபத்தோடு விற்க முயலும் இளவரசுவிடம், சூழ்நிலை தெரியாமல் விமல் மாடு மேய்க்க போவதை சொல்லி சரண்யா சிலாகிக்கிற காட்சி கலகலப்பு கலவரம்ப்ப்பா
வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கும் திருமுருகனின் ஓங்கு தாங்கான உடம்பு ஒன்றே போதும். அதையும் மீறி நடிப்பும் வருவதால் புதுமுக வரவில் தனிமுகம் காட்டுவார்.
காட்சிகளுக்கு தோதாக துண்டு துண்டாக எஸ்.எஸ்.குமரன் போட்டிருக்கும் சின்னஞ்சிறு பாடல்களும் பின்னணி இசையும் டாப் என்றால், டம்மா டம்மா பாடல் தனி அட்ராக்ஷன்! விருந்துக்கு பேர் போன தஞ்சையையே தலைவாழை இலையில் வைத்து பரிமாறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.
பாக்யராஜூக்கு பிறகு திரைக்கதையில் சென்ட்டம் அடித்திருக்கிற டைரக்டர் சற்குணத்தை 'மனசை திருடிய களவாணியே' என்று பாராட்டலாம். தப்பேயில்லை!

Panithuli-Kanda Naal Mudhal(High Quality)

Sunday, 30 March 2008

உனக்காக....

பூவே
அந்த வானம் உனக்காக
அதில் தவழும் மேகங்கள் உனக்காக
பூக்கள் உனக்காக
அதில் சுரக்கும் தேனும் உனக்காக

அந்த மணல்வெளி உனக்காக
அதில் நான் கட்டிய சிறு வீடுகள் உனக்காக
ஆற்றோர ஆலமர
விழுதுகளில் - நான் கட்டிய
ஊஞ்சலும் உனக்காக

இரவு நேர விண்மீன்கள் உனக்காக
அதை மெத்தையாக்கிடுவேன் உனக்காக
முழு நிலவெடுத்து - அதை
முகம் பார்க்கும்
கண்ணாடியாக்குவேன் உனக்காக

என்னுடல் வெறும் கூடுதான்
அதில் உள்ள கடைசி
மூச்சுக்காற்றும் உனக்காகவே தான்....

காத்திருப்பேன்.......

பறவையே
நீ எங்கோ சிறைவைக்கப்பட்டிருக்கிறாய்
உன் அழுகைகள் மட்டும்
கேட்கின்றது எனக்கு - ஆனால்
தேடி வருவதற்கு
ஏதும் தடயங்களில்லை

எம்மை யார் சந்திக்கவைத்தது
எம்மை எது காதல்கொள்ளவைத்தது
இதற்கு காரணமான அந்த
விதியை விட்டுவிட்டு
ஏன் உன்னை சிறையிலிட்டார்கள் ?

கற்சுவர்களுக்குள் அடைபட்டு
பூ போன்ற உன் மேனி
வாடிப்போய்விட்டதா?
பஞ்சு போன்ற உன் பாதங்கள்
பாறையாகிவிட்டதா?
வீணையின் தந்திகளை தடவிய
உன் மெல்லிய விரல்கள்
அந்த சிறைக்கம்பிகளைத் தடவுகின்றதா?

நாம் மனதால் சிறைபட்ட
போதும் வலிக்கவில்லையடி எனக்கு
இன்று உன்னை பிரிந்து
தவிக்கையில் நெருப்பில் இருப்பது போல்
இருக்குதடி எனக்கு

நாம் காதலித்தது
என்ன குற்றமா?
நாம் சேர்ந்து வாழநினைத்தது
என்ன தவறா?
ஏன் இத்தனை துன்பங்கள்
எம்மைச்சுற்றி?

இவை மறையுமன்று
உன் விழி பார்தது
கட்டிக்கொண்டு அழவிருக்கும்
அந்த நொடிக்காக ஏங்குதடி
என் மனம் தனியாக.........

Sunday, 2 March 2008

இனியும் வேண்டாம் ..............

அன்று மாரி கால மாழைப்பொழுது

மழை பெய்து சற்று ஓய்ந்திருந்தது - ஆனால்

இலைகளில் இருந்து விழும்

மழைத்துளிகள் மட்டும் நிற்கவில்லை இன்னும்


வாசலில் நின்றுகொண்டிருந்த என்னை

சில்லென்று உரசிய காற்று - என்

உண்ர்வுகளையும் உரசிவிட்டு சென்றது


அவளுடன் நான் பழகிய அந்த

ஒவ்வொரு நிமிடங்களும் - என்னில்

இன்றும் ஈரமாய் உள்ளது


அவள் என்னுடன் அமர்ந்திருந்நது பேசிய

ஒவ்வொரு வார்த்தைகளும் - என் நினைவில்

இன்னும் உயிருடன் இருக்கின்றது


என்னை ஏக்கத்துடன் பார்க்கும்

அந்த விழிகள் இரண்டும் - என்

விழிகளில் நிழலாய் தெரிகின்றது


எனக்காக மட்டும் உயிர் வாழ்ந்த

அந்த இதயம் - இன்று

என்னை விட்டு விலகியது ஏனோ?


இவ்வுலகை விட்டு உன் உயிர்

போகும் போதாவது - நீ

என்னையும் கூட்டிச்சென்றிருக்கலாமே









Friday, 29 February 2008

விட்டில் பூச்சி

ஓசைகளை மட்டும் தான்
கேட்கின்றேன் - அது வரும்
திசை தெரியாமல்

முட்டி மோதி திரிகின்றேன்
நான் போகும்வழி தெரியாமல்

இரவுகளில் மட்டும் வாழ்கின்றேன்
விடியலைக் காணாத - ஓர்
விட்டில் பூச்சியாக.... --

Tuesday, 26 February 2008

நினைவுகளில்

நீ என்னோடு பேசிச்சென்ற
ஒவ்வொரு வார்த்தையும்
மனதில் நிலையாய் நிற்கின்றது

நீ என்னோடு வாழ்ந்த
அனைத்து நாட்களும் - என்
வாழ்வில் இனிதாய் இருக்கின்றது

உன் விரல்பட்ட
என் தேகம் - இன்னும்
உனக்காக ஏங்குகின்றது

என்றாவது நீ வருவாய் என
காத்துக்கிடக்கின்றது என் இதயம்
இதமான அந்த நினைவுகளில்........

Monday, 25 February 2008

கல்லறைப் பூ

என் விழிகளில் நீ விழுந்ததும்
நான் இன்று பிறந்த குழந்தை
என்றே குதுகலித்தேன்

என் அருகில் நீ வருகையில்
வருடங்கள் அனைத்தும்
நிமிடமென மாறுவதை உணர்ந்தேன்

உன் பாதம் என்மேல்பட்டதும்
புரிந்தது நான் உன்னை
அலங்கரிக்க வந்த பூவல்ல - நானும்
ஓர் கல்லறைப் பூவென.....